Volume 5: June 16 - 30, 2020

தலை வணங்கக் கூடிய மிக மேன்மையான தலைவர்கள்

(Saluting our Superheroes)


(Covid) கோவிட்க்கு முன்னும் பின்னும், புதிய வழிமுறைகள், தொலை தூர நோக்கில் வேலை செய்யும் முறை, இன்னும் பலப் பல, இந்த உலகம் மறுபடியும் அதே போன்று இருக்காது என்றும், எண்ணிலடங்கா கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன.

கோவிட் 19ல் இருந்தும், நாடு முழுவதும் உள்ள ஊரடங்கில் இருந்தும், மனதைத் தொட்ட மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களைப் போற்ற இருக்கின்றோம். நாம் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் தங்கள் உயிரைப் பணயம் வைத்த நல் மனிதர்களைப் பற்றி சொல்ல இருக்கின்றோம்.

கடந்த இரண்டு மாதங்களாகவும், இன்னும் நான் வீட்டை விட்டு வெளியே ஒரு தடவை கூட கால் எடுத்து வைக்கவில்லை. ஆனால், எனது தம்பி 10 நாட்களுக்கு ஒரு முறை வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்க வெளியே சென்று கொண்டு தான் இருக்கிறான்.

வெளியே அவன் செலவிடும் அந்த மூன்று மணி நேரங்களில் இந்தக் கொடிய நோய்க் கிருமியின் தாக்கத்தில் இருந்து தன்னை அவன் எப்படிக் காத்துக் கொள்வான் என்று எனக்கு மிகவும் கலக்கமாக இருக்கிறது.

அப்போது தான் எங்கள் வாழ்க்கை நலமாக இருக்கப் பாடு படும் நபர்களின் குடும்பங்களைப் பற்றி நினைக்க நேர்ந்தது.

அவர்கள், உங்களையும், எங்களையும் போலத் தான்.யாரோ ஒருவரின் தந்தை, அல்லது தாய், கணவன் அல்லது மனைவி அல்லது ஒரு குழந்தை. ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்களின் வேலை அவர்களை போர் நடக்கும் இடத்திற்கேக் கொண்டு செல்லும். ஆனால், நாம் மட்டும் வீட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சொகுசாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மருத்துவர்கள், வங்கி அலுவலர்களைத் தவிர, இன்னும் நிறைய தொழில் செய்பவர்களும் கூட அவசியமான சேவைகளுக்குக் கீழே வருவார்கள். அவர்கள் - நர்ஸ், போலீஸ், இன்ஸ்பெக்டர்கள், முனிசிபல் அலுவலர்கள், காய் விற்பவர்கள், பால் வியாபாரிகள், குப்பை கூட்டுபவர்கள் MBA படித்தவர்களை விட, நிறைய சம்பாதிக்கும் நபர்களை விட, கண்ணாடி மாளிகை போன்ற அலுவலகங்களில் பணி புரிபவர்களை விட, மயக்குகின்ற நடிகைகளை விட, முக்கியமானவராகக் கருதப் படுகிறார்கள்.

முனிசிபல் அதிகாரிகள் தங்கள் அலுவலர்களை பாதுகாக்க விரும்பி, வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருந்தால், குப்பை எடுப்பவர்களை இரண்டு மாதங்களுக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டால், என்ன ஆகும்? உங்களால் ஒரு வினாடி கற்பனை பண்ண முடியுமா?

சேறு, சாக்கடை நீர், துர்நாற்றம், போன்றவை இந்த மாபெரும் நகரமான மும்பையில் நிரம்பி வழிந்தால், நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா?

அதே போல, காய்கறி, பழங்கள், அரிசி, பருப்பு, இறைச்சி, கொள்முதல் இடத்தில் இருந்து, பொட்டலம் கட்டி, போக்குவரத்தில் ஏற்றி, சிறு கடைகளுக்குக் கொண்டு வந்து, அந்த பெயர் தெரியாத கடைக் காரர் தினசரி பிழைப்புக்காக வியாபாரம் செய்யும் அந்த தெருக் கோடிக் கடைக் காரர் விற்க வில்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும்?

இல்லையென்றால் நீங்கள் சொல்லுவீர்கள். நான் தொழில் நுட்பத் துறையில் கை தேர்ந்தவன். எனவே, ஆன்லைனிலேயே பதிவு செய்து Swiggyயில் இருந்தும், (Big Basket) பிக் பாஸ்கெட்டில் இருந்தும் பொருட்களை மிகச் சுலபமாகப் பெற்றுக் கொள்வேன்.

ரொம்ப நல்லது. ஆனால் அந்தப் பொருட்களைக் கொண்டு வருவதும் உங்கள் கைகளில் கொடுப்பதும் உங்களையும் என்னையும் போன்ற ஒரு மனிதன் தான் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் இந்த கொடுமையான வெயிலில் குளிர் சாதன அறைக்குள் இருந்து கொண்டு அதைப் பெற்றுக் கொள்வீர்கள். என்ன பயன்?

உங்கள் அருகில் இருக்கும் காய் கறி வியாபாரியோ அல்லது பெயர் தெரியாத ஸ்விக்கி பையனோ அவர்கள் பாதுகாப்பை பொருள் படுத்தாதவர்கள் என்று இல்லை. அவர்களுக்கு மிக வலிமையான நோய் தடுப்பு சக்தி இருக்கும் என்றும் பொருள் இல்லை.

நாம் எல்லோருக்கும் தெரியும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி என்னை விடவும், உங்களை விடவும் மிக மிகக் குறைவாகத் தான் இருக்கும். இருந்தாலும், அவர்கள் வேலை செய்ய வில்லை என்றால் அவர்களுக்கு உணவு கிடைக்காது. வேலை இல்லையென்றால், வருமானமும் கிடையாது.

இன்று புலம் பெயர்ந்து வந்த நமது சகோதர சகோதரிகள், நம்பிக்கை இல்லாத கண்களுடனும், அடிபட்ட கால்களுடனும், தங்கள் சொந்த ஊருக்கு நடை பயணமாக செல்ல முடிவு செய்து விட்டனர். கட்டடம் கட்டுபவர்கள் நக்கலாக இந்த ஊரடங்கு முடிந்தவுடன், நாம் என்ன செய்வது என்று சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.

7000 ஆண்டுகளுக்கு முன் எகிப்துவை ஆண்ட அரசனின் கதை போன்று உள்ளது, பாருங்கள். இந்த புலம் பெயர்ந்த அடிமைகளைப் பற்றி நான் ஒன்றும் கவலைப் பட மாட்டேன், என்றான். அந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு எடுத்தவுடன், அரசனுக்கு வயிற்றில் புளி கரைத்து விடுகிறது. செங்கடல் வரை அவர்களைத் துரத்திப் பிடிப்போம் என்கிறான், பெங்களூரில் நடந்தது போல சொந்த ஊருக்குச் செல்லும் ரயில் வண்டிகள் அனைத்தும் ரத்துச் செய்யப் பட்டன.அவர்களின் ஓலங்களும், மெதுவாக கத்திக் கத்தி ஓய்ந்துவிடும். இந்த ஒரு அமைப்புச் சாரா கூட்டத்தின் குரல் தானாக அடங்கி விடும்.

நமது நாட்டில், ஏழைக்கு ஒரு தரமும், மற்றவர்களுக்கு ஒரு தரமும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தியா, மக்கள் கணிப்பியல் படி ஏழை பணக்காரன் மற்றும் தொழில் நுட்ப இந்தியா, ஆதரவற்ற இந்தியா என்ற பிரிவில் தான் இருந்து கொண்டு இருக்கிறது.

அவசியமான சேவைகள் என்று நாம் பட்டியல் போடும்போது, மருத்துவர்களைத் தவிர ஏழைகள் தான் அவசியமானவர்கள் என்று தெரிய வருகிறது. பல செவிலியர்கள் இன்று வசதியான நிலையில் இல்லை. அவர்களைத் தவிர, ஆஸ்பத்திரியின் மருத்துவ மனை இதர அலுவலர்கள், முதலுதவி வண்டி ஓட்டுனர்கள், போக்குவரத்து ஓட்டுனர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்சார அலுவலர்கள், போலீஸ், கல்லறை தோண்டுபவர்கள், தகனம் செய்பவர்கள் மற்றும் பல நபர்கள் வேலை செய்யாவிடில், இந்த நகரம் அழிந்து நாசமாகி விடும்.

திடீரென்று இந்த வசதி படைத்த நபர்கள் எல்லாம் இந்த தேசத்திற்கு எதற்குமே பயன் படாதவர்களாகி விட்டார்களே என்று இன்று தோன்றுகிறது.

இது தான் நமக்குச் சரியான நேரம்... இந்தக் கஷ்டப் படுவோரின் துன்பத்தில் பங்கேற்கவும், அவர்களுக்காக செபிக்கவும், ஆயிரக்கணக்கான இந்த பெயர் தெரியாத முகங்களுக்கு, கைம்மாறு கருதாமல் செய்யும் நபர்களை நினைத்துப் பார்க்கவும், இவர்கள் இல்லாமல், நாம் நமது வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று உணரவும்.

கடந்த பல வருடங்களாக எங்கள் சொசைட்டியில் குப்பை அள்ளிக் கொண்டிருக்கும் சோனுவிற்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன். இந்த ஊரடங்கினால் தான் அவனது மகத்தான சேவையை நாங்கள் உணர முடிந்தது. ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத வீரர்களுக்கிடையே இந்த ஒருவனின் பெயர் தான் எனக்குத் தெரிந்தது என்பது எவ்வளவு வெட்கக் கேடான விஷயம்.

இதில் கொஞ்சமாவது நாம் செய்ய வேண்டும் என்றால், ஒரு சில நபர்களையாவது தெரிந்து கொண்டு அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களுக்காக நேரடியாக சந்தித்து நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வது தான்.

பிரினெல் லோபோ

புனித ஆன்றூ பங்கு,

பாந்திரா மேற்கு, மும்பை


ஊரடங்கில் சேவை

(In Service during the Lockdown)

சமூக நடவடிக்கை மையம் (The Centre for Social Action - CSA) ராய்காட், தானே, மற்றும் மும்பை மாவட்டங்களில் இருக்கும் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. எப்படி? வழக்கமாக உதவி தேவைப் படுவோர்களுக்காகவும், தினசரி கூலி வேலை செய்பவர்களுக்காகவும், இந்த ஊரடங்கில் கஷ்டப்படும் புலம் பெயர்ந்த மக்களுக்காகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பங்குகளின் தொடர்புகள் மூலமாகவும், ஆண்கள் மற்றும் , பெண்களின் துறவற சபைகள் மூலமாகவும் மும்பை உயர் மறை மாவட்டத்தில் இருக்கும் மற்ற NGOக்கள் மூலமாகவும், CSA எப்போதும் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

பல மறை மாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் குருக்கள் மூலமாகவும் பல மாநிலங்களில் அமைக்கப் பட்டிருக்கும் புலம் பெயர்ந்தவர்களின் உதவி மையங்களிலிருந்தும், மனித நேய அமைப்புக்களில் இருந்தும், அரசாங்க அலுவலர்களிடம் இருந்தும், ராய்கட், மும்பை மற்றும் தானாவில் வசிக்கும் துன்பப் படும் நபர்களிடம் இருந்தும் CSAக்கு கஷ்டப் படும் பல பேரின் வேதனையான வேண்டுகோள்கள் வந்து கொண்டிருக்கின்றன.

உதவி சரியான நபர்களுக்குப் போய்ச் சேருவதற்காக, CSA ஊழியர்கள் மறை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் (Deanery) தனியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அந்த பகுதிகளில் இருக்கும் பல ஆலயங்களுடனும் , துறவற சபைகளுடனும் இணைந்து வேலை பார்க்க ஆரம்பித்தனர்.

CSAக்கு அவசர அழைப்பு வந்தால், உடனடியாக, அந்தப் பகுதி பொறுப்பாளருக்கு விஷயத்தைச் சொல்லி, துன்பத்தில் இருக்கும் நபரையும் அந்த பங்கின் covid 19 பொறுப்புக் குழுவினரையும் அல்லது அந்த பகுதியில் இருக்கும் ஒரு நிறுவனத்தினரையும் இணைத்து தொடர்பு ஏற்படுத்தித் தருவர்.

இவ்வாறு தேவையில் இருக்கும் மக்களுக்கு குறுகிய காலத்திற்குள் உதவி அளிக்கப் படுகிறது. ஒவ்வொரு உதவியும் கொடுத்து முடியும் வரை தொடர்ச்சியாக கண்காணிக்கப் படுகிறது.

தானியங்களும், சமைக்கப்பட்ட உணவும் பகிர்ந்தளித்தல்

CSA வின் ஒரு குறிப்பிடத்தக்க புதிய முயற்சி, கோராய் பகுதியில் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி தேவைப் படும் மக்களுக்கு தானியங்களுடன் சேர்ந்து பகிர்ந்தளிப்பது தான். இவ்வாறு விவசாயிகளும் தேவைப் படும் மக்களும் இந்த ஏற்பாட்டினால் மிகவும் திருப்திப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நல் மனமும் தாராள குணமும் கொண்ட மக்கள் மூலமாகவும், இந்த உயர் மறை மாவட்டத்தில் உள்ள பங்குத் தந்தைகள் மற்றும் துறவற சபைகளின் ஆதரவும், சேர்ந்து, 7000 குடும்பங்களுக்கு தானியங்கள் அளிக்கும் வேலை சிறப்பாக நடந்தது. அது தவிர, இரண்டு முறை சமைக்கப் பட்ட உணவை டோம்பிவிலியில் இருக்கும் 1000 புலம் பெயர்ந்த மக்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் கொடுக்கவும் முடிந்தது.

நாங்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும், சரியான ஆவணங்களை தயாரிப்பதிலும், வியாபாரிகளுக்கு கொடுக்கும் NEFT முறையில் பணம் செலுத்துவதிலும், புகைப் படம் எடுத்து வைப்பதிலும், போன் எண்களுடன் பகிர்ந்தளிக்கும் விவரங்களை சரியாக வைத்திருப்பதிலும், உதவி செய்யப் பட்டவர்களுக்கு உதவி கிடைத்ததா என்று ஓரிரு நபர்களிடம் சரி பார்த்துக் கொள்வதிலும், மிகவும் கவனத்துடன் செயல் பட்டு நேர்மையைக் கடைப் பிடிக்கிறோம்.

பயண உதவி

ஜார்கண்ட், ஒரிசாவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய விரும்பிய புலம் பெயர்ந்த மக்கள் 100 பேருக்கு மேல் தங்கள் பெயரை அரசு அதிகாரிகளிடம் பதிவு செய்வதற்கு வழி காட்டியும், அவர்களுக்கு பயணத்திற்காக உணவு மற்றும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்தும் வழியனுப்பினோம்.

பணம் தேவைப் படுபவர்களுக்கு பண உதவி.

தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல விரும்பிய 4 மாணவர்களுக்கு பண உதவி செய்து கொடுத்து சொந்த ஊருக்குச் செல்ல வைத்தோம்.

வெர்சோவாவில் இருக்கும் புலம் பெயர்ந்த மக்களின் மையத்திற்கு ஆதரவு

CSA செய்த இன்னொரு முக்கியமான வேலை என்னவென்றால்...அந்தேரி மேற்கில் இருக்கும், புனித நல்ல மேய்ப்பர் ஆலயத்தின் (Good Shepherd Church) பங்குத் தந்தை அருள் பணி ஜெரோம் அடிகளாருடன் ஒருங்கிணைந்து வெர்சோவாவில் இருந்த நிவாரண முகாமுக்கு ஒரு மாதம் முழுவதும் உதவி அளித்தோம்.

குருக்கள், கன்னியர்கள் மற்றும் இறை மக்கள் அடங்கிய குழு பச்சாதாப உணர்வோடு, காது கொடுத்துக் கேட்டு, அந்த முகாமில் இருந்த மக்களுக்கு ஒரு இனிய சூழ்நிலையை ஏற்படுத்துவதில் மிகவும் அருமையாக வேலை செய்தனர்.

அந்த மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, முனிசிபல் மருத்துவர் பரிந்துரைத்த மருந்து கொடுப்பதிலும், உடை, குளியலறைப் பொருட்கள் கொடுப்பதிலும், விளையாட்டு, மற்றும் பொழுது போக்குக் காரியங்கள் ஏற்பாடு செய்வதிலும், முக்கியமாக, ஒவ்வொரு இரவும் அவர்கள் இரவு உணவு உண்ட பிறகு, ஒரு சினிமா காண்பிப்பதிலும், அருமையாக உழைத்துச் சாதனை புரிந்தார்கள்..

இன்னும் பல அன்பர்கள் பல்வேறு வழிகளில் உதவி செய்தார்கள். ஒருவர் சினிமாவைப் பதிவிறக்கம் செய்து கொடுத்தார். இன்னும் ஒருவர் பல மொழிகளில் செய்தித்தாள் கொண்டு வந்து கொடுத்து உதவி செய்தார். பலர் பிஸ்கட், பன், வாழைப் பழம், துணிகள், காலணிகள், ஊருக்குச் செல்ல வசதியாக தங்கள் பயணத்திற்குத் தேவையான பைகள் கொடுத்தும் உதவினர். முகாமின் அலுவலர்களும் நல்ல மேய்ப்பன் ஆலய பங்கு மற்றும் கான்வென்ட் அடங்கிய குழுவினர் புலம் பெயர்ந்த மக்களுக்கு செய்த சேவையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராய்கட் மாவட்டத்திற்குத் திரும்பி வரும் புலம் பெயர்ந்த மக்களுக்கு ஆதரவு

பூனா, மும்பை, ஆந்திரா மாநிலம், மற்றும் கர்நாடகாவில் உழைத்துக் கொண்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ராய்கட் மாவட்டத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 125 பழங்குடி மக்களின் புனர் வாழ்வுக்கு நாங்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறோம்.

அவர்களைத் தொற்று நோய்த் தடுப்பிலிருந்து காப்பாற்ற தனிமைப் படுத்தி வைக்கும் போது, அரசாங்கம் அளித்த தானியங்கள் தவிர நாங்களும் அவர்களுக்குத் தானியங்கள் அளித்து ஆதரவு அளித்தோம். தனிமைப் படுத்தலில் இருந்து வெளியே போய் விடாமல் இருக்கவும், மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருப்பதற்காகவும், அவர்கள் தங்கி இருக்கும் நேரம் இனிமையாக இருப்பதற்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அவர்களை நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்.

தனிமைப் படுத்தல் முகாமில் இருந்து திரும்பி வரும் மக்களை ஒரு பயமோ களங்கமோ இல்லாமல், கிராம மக்கள் வரவேற்க, சமூக ஊழியர்களுக்கு நாங்கள் அறிவுரை தந்து இருக்கின்றோம். தனிமைப் படுத்தல் முகாமில் இருந்து திரும்பி வரும் மக்களின் வாழ்வாதரவிற்கு நாங்கள் உதவிகள் செய்து கொண்டு வருகிறோம். அவை என்னென்ன? காய்கறித் தோட்டம் வைக்க விதைகளும், மழைக்காலத்தில் முழு விவசாயத்திற்குத் தேவையான விதைகளும், அளித்தோம். அந்தப் பகுதியில் மிகுந்த தேவை இருந்ததால் மற்றவர்களுக்கு காய்ந்த மீன்களை வாங்கி விற்க உதவிகள் செய்தோம்.

முன்னோக்குப் பார்வை

மோசமான நிகழ்வுகள் பின்னே சென்றுவிட்டன, இனி நல்ல நிகழ்வுகள் மட்டும் தான் என்று நாம் செபித்தாலும், இயல்பு நிலை திரும்பும் வரை, இது நிச்சயம் இல்லை. தினச் சம்பள தொழிலாளர்களும் புலம் பெயர்ந்தோர்களும், வீட்டு வேலை செய்பவர்களும், தங்கள் சம்பளம் கிடைக்கும் வரை பல மக்களுக்கு உதவித் தொடர்ந்து தேவைப் பட்டுக் கொண்டு தான் இருக்கும்.

உணவு தவறாமல் கிடைப்பதற்கு, நாங்கள் தானியம் விநியோகம் செய்வதை தடையில்லாமல் செய்ய உழைத்துக் கொண்டிருக்கிறோம். மற்றும் கஷ்டப் படுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்வதற்கும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் பணியைச் செய்ய நிதி உதவி தர விரும்புபவர்கள் எங்கள் இணைய தளமான www.csamumbai.in ல் தொடர்பு கொண்டு உதவவும். உங்கள் உதவியைப் பொறுத்து, நாங்கள் நிறைய பேருக்கு உதவி செய்து, தேவை உள்ளவர்கள் யாரும் இல்லை என்ற நிலை வர உழைக்க விரும்புகிறோம்.

அருள் பணி மரியோ மென்ட்ஸ்,

இயக்குனர், சமூக நடவடிக்கை மையம்.

Fr Mario Mendes

Director, Centre for Social Action

புதுத் தம்பதியினர் தங்களது திருமணம் அன்று 50 படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் நன்கொடை அளிக்கின்றனர்

(Couple donates 50 beds, oxygen cylinders on wedding day)

ஒரு தனித்துவமான அறிகுறியாக, வசாயில் இருக்கும் நந்தகல் கிராமத்தில் வசிக்கும், புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் எரிக் ஆன்டன் லோபோ, 28, மெர்லின் 27, தங்கள் திருமணத்தைக் கொண்டாட அற்புதமான எண்ணத்திற்கு உயிர் அளித்தனர். அதாவது, சத்பாலா கிராமத்தில் இருக்கும் நாட்டுப்புற கோவிட் 19 (Covid 19) கவனிப்பு மையத்திற்கு சனிக்கிழமையன்று 50 படுக்கைகளையும், ஆக்சிஜன் சிலிண்டர்களையும் நன்கொடையாக அளித்தனர்.

"ஒரு எடுத்துக்காட்டான கிறிஸ்துவ திருமணத்தில், ஏறக்குறைய 2000 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள். மது, சிறப்பான உணவு இல்லாமல் இந்த திருமண நிகழ்ச்சி முழுமை அடையாது. நிச்சயமாக, இது ஒரு பெரிய செலவைக் கொண்டு வரும். ஆனால், நாங்கள் வித்தியாசமாக கொண்டாடத் தீர்மானித்தோம்", என்றார் லோபோ.

சனிக்கிழமை அன்று, வசாயில் இருக்கும் புனித கொன்சாலோ கார்சியா ஆலயத்தில் குடும்ப அங்கத்தினர்களையும் சேர்த்து 22 விருந்தினருடன் இந்தத் தம்பதியினர் ஒரு எளிமையான சடங்கில் தங்கள் திருமண வார்த்தைப் பாட்டை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

விருந்தினர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து கொண்டு, தனி நபர் இடைவெளியைக் கடைப் பிடித்தனர். பால்கர் மாவட்டத்தில் இருக்கும் வசாய் - விரார் பகுதியில் கோவிட் 19 (Covid 19) பெருநோயால் எண்ணற்ற மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். "இது வரை, பால்கர் மாவட்டத்தில், ஏறக்குறைய 90 மக்கள் இறந்து விட்டார்கள். 1500 மக்களுக்கு மேல் நோய் பாதித்துள்ளது. எனவே தான், நாங்கள் இந்த முயற்சியில் இறங்கினோம்" என்று எரிக் சொன்னார்.

"ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கு நல்ல வசதி செய்து கொடுத்து, எங்கள் தோழர்களான வசாய் மக்களுடன் எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்பினோம்" என்று அவர் சொன்னார்.

மார்ச் மாதத்திலேயே, எரிக் மற்றும் மெர்லின் உள்ளூர் எம்.எல். ஏ. (MLA Kshitij Thakur) சிடீஜ் தாகூர் அவர்களை நன்கொடை அளிக்கும் எண்ணத்துடன் அணுகினர். அவர் பால்கர் மாவட்ட கலெக்டர் டாக்டர் கைலாஸ் ஷிந்தே (Dr Kailash Shinde) அவர்களை போய்ப் பார்க்க சொன்னார். அவர்கள் கலெக்டரைப் போய்ப் பார்த்தனர். கலெக்டர் இந்த சிறந்தத் திட்டத்தை உடனடியாக அங்கீகரித்தார்.

“அரசாங்க சுகாதாரத் துறையின் வரைமுறை பிரகாரம் ஆஸ்பத்திரி படுக்கைகளை வடிவமைத்துக் கொடுக்குமாறு, நாங்கள் வசாய் தயாரிப்பாளரை அணுகினோம். பலதரப்பட்ட துணி வணிகர்களைத் தொடர்பு கொண்டு மெத்தை, கம்பளி, தலையணை, போர்வை மற்றும் இதர பொருட்களை நியாயமான விலையில் கொடுக்குமாறு கேட்டோம்” என்று எரிக் சொன்னார்,

"கோவிட் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு எப்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப் படுமோ, அப்போது உடனே நாங்கள் வாங்கித் தருவது என்று முடிவு பண்ணினோம்," என்று எரிக் கூறினார்.

திருமண வைபவம் முடிந்தவுடன், தம்பதியினர் கோவிட் கவனிப்பு மையத்திற்கு உடனே சென்றனர். அங்கே படுக்கைகள் ஏற்கனவே வந்திருந்தன. அவர்களுடைய திருமண உடையிலேயே வந்த தம்பதியினர் முன்னால் ஒரு சிறிய தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு முன்னால் இந்தத் தம்பதியினர் உள்ளூரில் இருந்த சமூக அடுப்புத் திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தங்கள் சொந்த ஊருக்கு ஷ்ரமிக் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய விரும்பிய வசாய் - விரார் பகுதியில் இருந்த புலம் பெயர்ந்தோர் விவரங்களை அரசாங்கத்திற்கு அளித்து உதவினர்.

"இந்த சமூகத்திற்கு எரிக் மற்றும் மெர்லின் ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்கள். அவர்களுடைய உன்னத சேவையை நான் பாராட்டுகிறேன்" என்று தாகூர் சொன்னார். " கோவிட் பெருநோய்யை போராடி, அதிலிருந்து உடனடியாக வெளியே வர இது போன்ற நல்ல சமாரித்தன்கள் உதவுவார்கள்.”

"வசாய் - விரார் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் சமூகத்திற்கு எப்போதும் ஆதரவாகவே இருக்கிறார்கள். இனி வருகின்ற நாட்களில், இன்னும் பல மக்கள் தானாகவே முன் வந்து தங்கள் பங்கைச் செய்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்", என்று அவர் சொன்னார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் (ஜூன் 21, 2020)

சமூகத் திருத் தூதரது உள்ளகக் குழுவின் கூட்டம்

(Social Apostolate Core Group Meeting)

நமது உயர் மறை மாவட்டத்தின் சமூகத் திருத் தூதர் அங்கத்தினர்களுடன் ஜூன் 6 2020 அன்று நமது மேன்மை தங்கிய பம்பாய் பேராயர் ஆஸ்வால்ட் கர்தினால் க்ரேஸியஸ் (Oswald Cardinal Gracias) கணினியின் நேரடித் தொடர்பில் கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் : ஆயர் ஆல்வின் டிசில்வா, Dr ரூத் டிசூசா, Dr ஆர்மிடா பெர்னாண்டஸ், Dr பிரினெல் டிசூசா, திரு ராய்ஸ்டன் ப்ரகன்சா, அருள் பணி. ப்ரெசெர் மஸ்கரேனஸ் SJ மற்றும் அக்னேலோ மெனெஸிஸ்.

இந்த உள்ளகக் குழு, கர்தினால் க்ரேஸியஸ் உடன் பம்பாய் மறை மாவட்டத்தில் கோவிட் 19 இனால் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்குத் தீர்வு கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர்.

· அவதிப் படும் மக்களுக்கு உதவும் பொருட்டு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் பற்றிய ஒரு e - புத்தகம் தயாரிக்கப் பட்டது. இயேசுவின் திரு உடல் திரு ரத்தம் திருவிழாவின் போது அந்த புத்தகம் முறையாக வெளியிடப் படும். (ஜூன் 14 )

· இன்னும் போகப் போக, உணவு விநியோகிப்பதில் உள்ள பிரச்னை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப் படப் போவதால், உணவுப் பாதுகாப்பிற்குத் தொடர்ச்சியான அணுகுமுறையாக, திட்டங்கள் தீட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

· இன்றைய வேலை நிலவரம், மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு ஆழமான கவலையாக உள்ளது. அந்தப் பிரச்னையை சரி செய்ய ஆதரவான அடிப்படை வசதிகள் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

· நமது கிறிஸ்துவ விசுவாசத்தை நிரூபிப்பதற்காக, நமது சிறு கிறிஸ்துவ அன்பியங்களுக்கு இணையாக சிறு மனித அன்பியங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

· நியாயம், மனித உரிமைகள், மக்களாட்சி, மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒருமித்த மனமுடைய குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானது. இந்த எண்ணமானது இன்னும் விருத்தி செய்யப் பட வேண்டும்.

கர்தினால் க்ரேஸியஸ் நடக்கும் நல்ல காரியங்களுக்கு ஆசீர் அளித்து மிகவும் பாராட்டினார். சமூக திருத் தூதரகக் குழுவின் சேவைகளை கீழ்க்கண்ட வலைத் தளத்தில் காணலாம்.:

வலைத் தள முகவரி sagroup.aob@gmail.com

அல்லது வலைத்தளத்தில் உள்ள படிவத்தை நிரப்பியும் தொடர்பு கொள்ளலாம்

இரங்கல் செய்தி (OBITUARY)

அருள் பணி. ஆல்வாரோ நாசரேத், மறை பரப்பு சீடர்

(மண்ணில் பிறந்தது : டிசம்பர் 23, 1932 ; விண்ணில் சேர்ந்தது : ஜூன் 22, 2020)


Fr Alvaro Nazareth: Missionary Disciple

(Born: December 23, 1932; Died: June 22, 2020)

அருள் பணி ஆல்வாரோ நாசரேத்தின் இறுதிச் சடங்குத் திருப்பலியில் அளித்த பிரசங்கத்தில் இருந்து எடுத்த சில முத்துக்கள்:

நமது சகோதரர் அருள் பணி ஆல்வாரோ அவர்களின் வாழ்க்கையைக் கொண்டாட நாம் இங்கே குழுமி இருக்கிறோம். எல்லோரும், மவுண்ட் கார்மெல் ஆலயத் தந்தையர்கள் குழுவாக இருக்கட்டும், இளைய, முதிய நமது பங்கு மக்களாக இருக்கட்டும், அவர் முப்பது வருடங்களாக உழைத்த பிரேசிலில் இருக்கும் மக்களாக இருக்கட்டும், மரியாளின் சேனையின் அங்கத்தினர்களாக இருக்கட்டும், நீங்கள் நிச்சயம் என் கருத்துடன் உடன் படுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எல்லோரும், அவருடன் வைத்துக் கொண்ட தொடர்பினால், மிகவும், அழுத்தமாக மாற்றம் அடைந்திருக்கிறீர்கள் என்பதே உண்மை.

இந்த பங்கில் அவர் செய்த ஊழியங்கள் : மரியாயின் சேனை, ஆண்களின் கூட்டுறவுக் குழுமம், கொங்கணி குழுமம், மறைக் கல்வி மற்றும் தேவத் திரவிய அனுமானங்கள் கொண்டாட்டம். நான் இந்த இடத்தில் நின்று கொண்டு எனது வலது கைப் பக்கம் பார்க்கிறேன். அந்த இடம் தான் அவரின் மிக முக்கியமான இடம். அங்கு உட்கார்ந்து தான் ஒவ்வொரு மாலையும் பாவ சங்கீர்த்தனம் கேட்பார். வரும் மக்களுக்கு கடவுளுடனும் ஒருவருக்கொருவருடனும் அமைதியை ஏற்படுத்திக் கொடுப்பார்.

அவர் மறைந்த நாளில் இருந்து எனக்கு ஏராளமான குறுந்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஊரடங்கு முடிந்தவுடன் எப்போது நாங்கள் ஆலயத்திற்கு வர ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாங்கள் இந்த குருவின் பிரசன்னத்தை மறக்க முடியாமல் தவிப்போம்.

எங்கள் குழுவில் நாங்கள் நிச்சயம் அவரில்லாமல் தவிப்போம். முக்கியமாக உணவு உண்ணும் மேசையில், அவரின் அரசியல் பேச்சுக்கள், அவர் You tubeல் ரசித்த மத சம்பந்தமான வாக்குவாதம், அவர் கால் பந்தில் வைத்திருந்த அன்பு, அரசியல் ஆலோசனை, விசுவாசத்தில் அவருக்கிருக்கும் அன்பு, எல்லாவற்றையும் தனக்கே உரிய ஒரு நகைச்சுவை உணர்வோடு சொல்வது.. இவை எல்லாவற்றையும் நாங்கள் இனிமேல் ரசிக்க முடியாது.

அவர் தனது உடல் நலத்தில் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தாலும், யாருக்கும் அவர் ஒரு சுமையாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவர் ஒரு சேவை செய்யும் மனிதர். அன்பு செய்யக் கூடிய மனிதர். மன்னிக்கக் கூடிய ஒருவர். சமாதானம் செய்யக் கூடிய ஒருவர். முக்கியமாக ஏழைகளுக்கு அன்பு செய்யக் கூடியவர்.

எப்போதும் அவர் அலுவலகத்திற்கு வெளியே மக்கள் அவரைப் பார்க்க காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களின் தேவையை அறிந்து, ஓரளவுக்காவது உதவி செய்ய அவரே அவர்களைக் கூப்பிட்டிருப்பார். இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும் மிகவும் அவர் நட்பாக இருந்தார். அவரிடம் பலரும் ஆலோசனைக் கேட்கவும், அறிவுரைக் கேட்கவும், கலந்தாலோசிக்கவும் வந்த வண்ணம் இருந்தது எனக்கு நன்றாகத் தெரியும்..

கோவாவில் அஸகாவில் தனது சொந்தங்களை எண்ணி மிகவும் பெருமைப் படுவார். அங்கிருந்து இறை ஊழியத்தில் சேவை செய்ய வந்த மற்ற அறிவு ஞானிகளைப் பற்றி பெருமை பெருமையாகப் பேசுவார். அவர் குடும்பத்தில் இருந்து மூன்று குருமார்கள் இறைவனின் சேவைக்கு வந்திருக்கிறார்கள். ஒன்று அவர். மற்ற இருவர்..அருள் பணி அருளானந்தா SJ மற்றும் அருள் பணி ப்ளேஸ் நாசரேத்.

கடவுள் பயம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்களை கடவுளுக்கே அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். இதுவே அவருடைய வாழ்க்கைக்கு வசீகர சக்தியாக இருந்தது. இந்த சிறப்பான அர்ப்பணத்திற்காக அவரின் பெற்றோர் செய்த தியாகங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம். 1959ம் ஆண்டு டிசம்பர் 21ந் தேதி இவருக்கு குருப் பட்டம் கொடுக்கப் பட்டது. உடனே அவர் மறை பரப்புப் பணியில் சேவை செய்ய விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். உடனே அவரை பிரேசிலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர் மறை பரப்புக் குருவாக முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார்.

அவர் பம்பாய்க்குத் திரும்பிய பின், அவருக்கு மரியாயின் சேனையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கொடுக்கப் பட்டது. பம்பாய் உயர் மறை மாவட்டத்தின் முக நூல் பக்கத்தில் வந்த அவரது நேர்காணலில், பணியில் இருந்து ஓய்வு பெற்றாயிற்று, ஆனால் இன்னும் வெளியேற வில்லை என்ற தொடரில், அவர், இறைவனின் விருப்பத்தைத் தொடர்ந்து செய்வேன். இறைவனின் விருப்பத்தைத் தொடர்ந்து செய்வதிலேயே உயிரை விடவும் விருப்பமாக உள்ளேன்" என்று கூறினார். எனவே தான், தன்னைத் தானே எப்போதும் கையளித்திருந்தார்.

அவருடைய இறப்பில், இந்த உயர் மறை மாவட்டம் ஒரு தூணை இழந்து விட்டது. அவர் நம் குருக்களுக்காகவும், அவருடைய பங்கு தோழமைக் குருக்களுக்காகவும், பங்கு மக்களுக்காகவும், தனது நண்பர்களுக்காகவும், தாம் நேசித்தவருக்காகவும், தனது குடும்பத்தினருக்காகவும் விண்ணுலகில் செபித்துக் கொண்டிருப்பார் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

சில மாதங்களுக்கு முன்னால் தான், டிசம்பர் 2019 ல் தனது குருத்துவப் பணியில் 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். 30 - 60 என்றழைக்கப் படும் அவரது 60 ஆவது குருப் பட்ட நினைவு நாளையும் அருள் பணி கிறிஸ்டோபரின் 30 ஆவது குருப் பட்ட நினைவு நாளையும் ஒரு சேரக் கொண்டாடினோம். அந்த நாளைக் கொண்டாட முடியுமோ, அது வரை தான் உயிரோடு இருப்போமா என்று அவருக்குச் சந்தேகமாகவே இருந்தது.

ஆனால் நாங்கள் அவரைத் தொடர்ந்து கட்டாயப் படுத்திக் கொண்டாட வைத்தோம். அவர் தனது அன்பு மக்களுடனும், நண்பர்களுடனும், அன்பாக வாழ்த்துத் தெரிவித்த பங்கு மக்களுடனும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்தோம். கொண்டாட்டத்திலும், செபத்திலும், அருள் பணி ஆல்வாரோவுடன் இருந்த ஞாபகம் மறக்க முடியாதது. அருள் பணி ஆல்வாரோ தனது பணி பூர்ணம் அடைந்தது என பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.

அருள் பணி ரூபன் டெல்லிஸ்

Fr Reuben Tellis

**************

தமிழாக்கம் : திருத் தொண்டர் மு. லாரன்ஸ் சகாயதாஸ்.

Tamil translation by Dn.M. Lawrence Sahayadass